×

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்தார் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ்மீனா

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சி, சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம், நீர்வளத்துறை, நெடுஞ்சாலைத்துறை, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் ஆகியவற்றின் சார்பில் பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகள், பாதாளச் சாக்கடை திட்டப் பணிகள் குறித்து தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, அனைத்து பணிகளையும் விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

பெருநகர சென்னை மாநகராட்சி, ஆலந்தூர் மண்டலம், வார்டு 156. முகலிவாக்கம், சபரி நகர் மற்றும் மதனந்தபுரம் பகுதிகளில் சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் ரூ.99.71 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் பாதாளச் சாக்கடை திட்டப் பணிகள் குறித்து தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா அவர்கள் இன்று (09.07.2023) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்தப் பணிகளின் மூலம் 39,000 நபர்கள் பயனடைவார்கள்.
ஆய்வின்போது, தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் பருவமழைக்கு முன்னதாக பாதாளச் சாக்கடை பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், பணிகள் மேற்கொள்ளும் இடங்களில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளவும். பணிகள் முடிக்க முடிக்க அந்த பகுதிகளில் தரமான சாலைகளை நெடுஞ்சாலைத் துறையினர் உடனுக்குடன் அமைக்க வேண்டும் எனவும், சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து, லலிதா நகர் 2ஆவது தெருவில் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் வெள்ளத் தடுப்பு நிவாரண நிதியின் கீழ். ரூ.3.49 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு. அங்குள்ள பொதுமக்களிடம் கலந்துரையாடினார். மேலும், இந்த மழைநீர் வடிகால் பணிகளை 15 நாட்களுக்குள் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் பணிகளை மேற்கொள்ளவும். பணிகள் முடிக்க முடிக்க அந்த பகுதிகளில் தரமான சாலைகளை நெடுஞ்சாலைத் துறையினர் உடனுக்குடன் அமைக்க வேண்டும் எனவும், அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

மேலும், நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள போரூர் ஏரியில் மாநகராட்சியின் சார்பில் மேற்கொள்ளப்பட உள்ள நடைபாதை அமைத்தல், கரைகளை பலப்படுத்துதல், ஏரியினை பசுமையாகப் பராமரிக்கும் வகையில் மரங்கள். செடிகள் நடுதல் போன்ற அழகுப்படுத்தல் மற்றும் மேம்படுத்தும் பணிகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.பின்னர் வளசரவாக்கம் மண்டலத்திற்குட்பட்ட போரூர் சந்திப்பில் நெடுஞ்சாலைத்துறை, பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் ஆகியவற்றின் சார்பில் மேற்கொள்ளப்பட உள்ள மழைநீர் வடிகால் மற்றும் பாதாளச் சாக்கடை திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து வார்டு-156க்குட்பட்ட போரூரில் உள்ள நகர்ப்புர வீடற்றோர் காப்பகத்தில் தன்னார்வ அமைப்பு மூலம் ஆதரவற்ற குழந்தைகள் பராமரிக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அங்குள்ள சமையல் கூடத்தினைப் பார்வையிட்டு அவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும், அங்குள்ள குழந்தைகளால் பராமரிக்கப்படும் மாடித் தோட்டத்தினைப் பார்வையிட்டு குழந்தைகளைப் பாராட்டினார். குழந்தைகளுடன் கலந்துரையாடி கல்விதான் மிகவும் முக்கியம் என்று கூறி, நன்கு படிக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். காப்பகத்தினை சுத்தமாகவும், தூய்மையாகவும் பராமரிக்க வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

தொடர்ச்சியாக, ராமாபுரம், திருவள்ளூர் சாலையில் நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் வெள்ளத் தடுப்பு நிவாரண நிதியின் கீழ் ரூ.20 கோடி மதிப்பீட்டில் 2960 மீ. நீளத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இவற்றில் 1706 மீ. நீளமுள்ள மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 1254 மீ. நீளமுள்ள பணிகள் நடைபெற்று வருகிறது. இவ்விடத்தில் சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகளும் நடைபெற்று வருவதால், நெடுஞ்சாலைத் துறையுடன் சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியமும் ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொண்டு விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், பணிகள் முடிக்க முடிக்க அந்த பகுதிகளில் தரமான சாலைகளை நெடுஞ்சாலைத் துறையினர் உடனுக்குடன் அமைக்க வேண்டும் எனவும், அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

மேலும், அடையாறு மண்டலத்திற்குட்பட்ட கோட்டூர்புரம், ரிவர் வியூ சாலையில் தனியார் பங்களிப்புடன் பராமரிக்கப்பட்டு வரும் மாநகராட்சி நகர்வனப் பூங்காவினைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பூங்காவில் நடப்பட்டுள்ள மரக்கன்றுகளை நல்ல முறையில் தொடர்ந்து பராமரிக்கவும் கூடுதலாக மரக்கன்றுகள் மற்றும் செடிகளை நட்டு பசுமையாகப் பராமரிக்கவும், பூங்காவை சுத்தமாகவும், தூய்மையாகவும் பராமரிக்கவும் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா அவர்கள் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது, கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் டாக்டர் ஜெ.இராதாகிருஷ்ணன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் தா.கார்த்திகேயன், இணை ஆணையாளர் (பணிகள்) டாக்டர் ஜி.எஸ்.சமீரன், சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய செயல் இயக்குநர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், தெற்கு வட்டார துணை ஆணையாளர் எம்.பி.அமித், நீர்வளத்துறை, நெடுஞ்சாலைத்துறை, சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் மற்றும் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தைச் சார்ந்த உயர் அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்

The post சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்தார் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ்மீனா appeared first on Dinakaran.

Tags : Chief Secretary ,Sivdasmeena ,Chennai ,Metropolitan Chennai Corporation ,Metropolitan Drinking Water Supply and Sewerage Board ,Water Resources ,Highways Department ,Metro ,Shivtasmeena ,
× RELATED தடையின்றி மின்சாரம்: தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆலோசனை